பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு அடுத்தடுத்து பேரிடிகள் விழுந்து வருகின்றன. அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் மிக முக்கிய கூட்டாளியான ஷேக் யூசுப் அப்ரிடி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இந்த அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

லஷ்கர் இயக்கத்திற்கு புதிய ஆட்களை சேர்த்தல் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் அப்ரிடி மிக முக்கியப் பங்காற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த வாரம் லஷ்கர் அமைப்பின் அமீர் ஹம்சா துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில், இப்போது யூசுப் அப்ரிடி குறிவைத்து வீழ்த்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

2008 மும்பை தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத் தற்போது சிறையில் உள்ள நிலையில், வெளியே இருக்கும் அவரது வலதுகரங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்படுவது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது. அப்ரிடியின் கொலையைக் கண்டித்து அங்குக் போராட்டங்கள் வெடித்துள்ளதால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.