அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவை, அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
ஈரானுக்கு எதிரான டிரம்பின் கடும் போக்கு மற்றும் இங்கிலாந்து மீதான சில விமர்சனங்களுக்கு மத்தியில், இந்தச் சந்திப்பு உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது. இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியது, இரு நாட்டு உறவில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வரவேற்பு விழாவின் போது டிரம்ப் பேசிய ஒரு விஷயம் அங்கிருந்தோரைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது. “எனது தாயாருக்கு மன்னர் சார்லஸ் மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. சார்லஸ் இளமைப் பருவத்தில் இருந்தபோது, அவர் மிகவும் அழகாக இருப்பதாக என் தாயார் அடிக்கடி சொல்வார்” என்று டிரம்ப் கலகலப்பாகக் குறிப்பிட்டார்.
டிரம்பின் இந்தச் சுவாரஸ்யமான பேச்சு இங்கிலாந்து அரச குடும்பத்தினரை நெகிழ வைத்ததோடு, அந்த இடத்தையே கலகலப்பாக்கியது. அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்கு நடுவே டிரம்பின் இந்த ‘பர்சனல் டச்’ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
