தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது ஒரு அதிர்ச்சிச் சம்பவம். பீகாரின் கதிஹார் சந்திப்பில் ஜெயநகர்-மனிஹாரி ஜானகி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் பெரும் சண்டை மூண்டதால், ஒரு பெண் பயணி கழிவறைக்குள் பூட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. ரயிலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆண்களால் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சண்டை காரணமாகப் பயந்துபோன அந்தப் பெண் பயணி, கழிவறைக்குள் இருந்து கொண்டே ஒரு வீடியோவை பதிவு செய்தார். அதில், “ரயிலில் சண்டை நடக்கிறது. மக்கள் கழிவறை கதவை வேகமாகத் தட்டுகிறார்கள். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என்று நடுங்கும் குரலில் அவர் கூறுகிறார். பின்னர், இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வந்து, அந்தப் பெண்ணை பத்திரமாக அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றது. இந்த அனுபவம் “மிகவும் பயங்கரமானது” என்று கூறி, அந்தப் பெண் இந்த வீடியோவை ‘X’ வலைதளத்தில் வெளியிட்டார்.

அவர் மேலும், “நான் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கதிஹார் சந்திப்பில் 30-40 இளைஞர்கள் கோஷம் போட்டபடியும், ஒருவரை ஒருவர் தள்ளியபடியும் ரயில் பெட்டிக்குள் திடீரென நுழைந்தனர். நான் கழிவறையில் இருந்தேன். வெளியே வர முடியவில்லை. ரயில்வே உதவி எண்ணை (139) அழைத்த பிறகு RPF வந்து எனக்கு உதவியது” என்று பதிவிட்டார். இறுதியாக, “எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் பீகாரை திருத்த முடியாது” என்று அவர் ஒரு கடுமையான கருத்தையும் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.