கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தாய், உடல்நலம் பாதித்த தனது இரண்டு வயது குழந்தையை ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்த மூன்றரை கிராம் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அங்கு நின்றிருந்த ஒரு பெண் குழந்தையைக் கொஞ்சியதாகத் தெரியவந்தது.
அந்தப் பெண்ணிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.போலீசார் அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோதும் அவர் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
இருப்பினும் சந்தேகம் தீராத போலீசார், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது குழந்தையின் தங்கச் சங்கிலி அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருப்பது உறுதியானது.
விசாரணையில் அவர் நீலம்பூரைச் சேர்ந்த சமீனா (35) என்பதும், பிடிபடுவோம் என்ற பயத்தில் நகையை விழுங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.தற்போது சமீனாவின் வயிற்றிலிருக்கும் நகையை அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியே எடுப்பதற்காக, மருத்துவர்கள் அவருக்கு ‘இனிமா’ கொடுத்து முயற்சி செய்து வருகின்றனர்.
பலமுறை முயற்சி செய்தும் நகை இன்னும் வெளியே வராததால், போலீசார் மற்றும் மருத்துவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல நடித்து நகை திருடப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
