உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக, உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் கண்ணுக்குத் தெரியாதவாறு முழுமையாக மறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் அதிகாலை வேளைகளில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்துள்ள நிலையில், தாஜ்மகால் அமைந்துள்ள வளாகம் முழுவதும் அடர்ந்த பனித்திரை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், தூரத்திலிருந்தோ அல்லது தாஜ் வியூ பாயிண்ட் பகுதியிலிருந்தோ அதன் அழகைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நீண்ட தூரம் பயணம் செய்து வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

பனிமூட்டம் காரணமாக சாலைகளில் பகல் நேரங்களிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊர்ந்து செல்லும் சூழல் நிலவும் நிலையில், வானிலை ஆய்வு மையம் வரும் 24-ஆம் தேதி வரை உபி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது