சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் தங்கள் உயிரையே அபாயத்திற்குள்ளாக்குவது தற்போதைய காலத்தில் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள கலைஞர் அகி ராய் கடும் குளிரில் பனி படர்ந்த மலைப்பகுதியில் மெல்லிய சிவப்பு நிறப் புடவை அணிந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா நாயகி போல காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் மேற்கொண்ட இந்த முயற்சி விபரீதத்தில் முடிந்தது. பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் படப்பிடிப்பு நடத்தியபோது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் அளவு குறைந்தது. தலைசுற்றல் மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்ட அவர், அங்கேயே அழுதுகொண்டு நிலைகுலைந்து போனார்.

“>

மேலும் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு தடிமனான ஜாக்கெட் அணிவித்து, ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சரியான நேரத்தில் உதவி கிடைத்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், ரசிக்கத்தக்க வகையில் ரீல்ஸ் எடுப்பது தவறில்லை, ஆனால் உயிருக்கு ஆபத்தான முறையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது முட்டாள்தனம் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது கனவை நிறைவேற்றவே இவ்வாறு செய்ததாக அகி ராய் விளக்கமளித்தாலும், பாதுகாப்பு உணர்வு இல்லாமல் செயல்படுவது மற்றவர்களுக்கும் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.