ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், மது குடிக்கும் போட்டியில் பங்கேற்று தலா 19 பீர் பாட்டில்களைக் குடித்த இரண்டு மென்பொருள் பொறியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னமய்யா மாவட்டம், பந்தவடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணிக்குமார் (34) மற்றும் புஷ்பராஜ் (26) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வந்த இவர்கள், தங்களது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது மணிக்குமார் மற்றும் புஷ்பராஜ் இடையே யார் அதிக மது குடிப்பது என்ற போட்டி எழுந்துள்ளது. மதியம் 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை இருவரும் விடாமல் தலா 19 பீர் பாட்டில்களைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.

அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், இருவருக்கும் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தனர். உடனே அவர்களின் நண்பர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மணிக்குமார் உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜும் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், “அதிகப்படியான மது அருந்தியதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது” என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த மணிக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். புஷ்பராஜுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனிடையே, இரண்டு பொறியாளர்களும் கள்ளச்சாராயம் அருந்தியதாலேயே உயிரிழந்ததாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (YSRCP) குற்றம் சாட்டியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கலால் துறை மறுத்துள்ளது. இது குறித்து கலால் துறை கண்காணிப்பாளர் மதுசூதன் கூறுகையில், “விசாரணையில் அவர்கள் அருந்திய மதுவில் எந்தக் குறைபாடும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதே உயிரிழப்புக்குக் காரணம்” என்று விளக்கமளித்தார்.

ஒரே நேரத்தில் 19 பீர்களைக் குடித்து, இரண்டு இளம் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.