தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகரில் மாநாடு நடத்தினாலே அடுத்த தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்பதற்கு வரலாறு சாட்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இங்கு நடைபெற்ற மாநாடுகளைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் வென்றதை நினைவுகூர்ந்த அவர், வரும் தேர்தலில் திமுக 7-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் தொண்டர்களிடையே மிகுந்த நம்பிக்கையுடன் உரையாற்றினார்.

மேலும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த முதல்வர், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தாலும் பட்ஜெட்டில் நமக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

தமிழுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் திமுக முன்னின்று காத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘நானும் ரவுடிதான்’ என்பது போலத் தான்தான் கூட்டணிக்குத் தலைமை எனப் புலம்பிக் கொண்டிருப்பதாகக் கிண்டல் செய்தார்.

தனக்கு பதவி கொடுத்தவர்களையே கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு, வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய தோல்வி காத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் எச்சரித்தார்.