இந்தியர்களுக்கான 30 நாள் விசா இல்லா திட்டம் மலேசியாவில் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் 2026 டிசம்பர் 31 வரை அமலில் உள்ளது. இதன் மூலம் வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியாவில் 30 நாட்கள் வரை விசா இன்றி தங்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் குறித்து மலேசிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயணிகளிடம் போதுமான நிதி, தங்குமிட ஆதாரம் மற்றும் நாடு திரும்பும் டிக்கெட் இல்லாவிட்டால், அவர்கள் குடியேற்ற விதிகளை மீறுவதாகக் கருதப்படுவார்கள். அப்படி வந்தவர்களுக்கு மலேசியாவில் தரையிறங்க அனுமதி வழங்கப்படாது எனவும், அவர்கள் விமானத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 30 நாள் விசா இல்லா திட்டம் வேலை தேடும் நோக்கத்திற்காக அல்ல என்றும், வேலைவாய்ப்பு உறுதி அளிப்பதாகக் கூறும் ஏஜென்ட்களிடம் இந்தியர்கள் ஏமாறக்கூடாது என்றும் தூதரகம் எச்சரித்துள்ளது. தரையிறங்க முடியாத நிலை உருவானால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அந்தப் பயணிகளை திரும்ப அழைத்துச் செல்லும் வரை அவர்கள் விமானத்திலேயே இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.

மலேசியாவில் சுற்றுலா அல்லது வணிகப் பயணத்தை மேற்கொள்ளும் இந்தியர்கள் இத்தகைய விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.