அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஜி.ஆலன் செங் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரது இல்லத்துக்கு சென்ற ஆலன், சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண் தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, டாக்டர் ஆலன் தன்னை பலாத்காரம் செய்தது உறுதியாக தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் ஆலன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடைபெறும் போதே, மேலும் 7 பெண் நோயாளிகளுக்கும் இதேபோல் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.

வழக்கின் அனைத்து சான்றுகளையும் பரிசீலித்த நீதிமன்றம், குற்றம் நிரூபணமானதால் டாக்டர் ஜி.ஆலன் செங்-க்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இனி மருத்துவ பணியை மேற்கொள்ளக்கூடாது என்பதற்கான தடை உத்தரவும் வழங்கியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க மருத்துவ உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.