கர்நாடக மாநிலத்தில், செல்வம் பெருகும் என்ற ஆசையில் 80 வயதுடைய கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மடாஷெட்டி என்ற அந்த நபர், ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு, சித்ரா பௌர்ணமி தினமான நேற்று தனது தாயைக் கொலை செய்து புதைப்பதற்காக வீட்டில் 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டியுள்ளார்.

அங்கு பானை, எலுமிச்சை மற்றும் குங்குமம் வைத்து மாந்திரீக பூஜைகளையும் அவர் செய்துள்ளார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குப் போலீசார் வருவதை அறிந்த சாமியார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மடாஷெட்டியைப் பிடித்து விசாரித்தபோது, பணம் செழிக்க வேண்டும் என்பதற்காகவே பெற்ற தாயைப் பலி கொடுக்க முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய சாமியாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.