உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்து கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. “அப்பா, இதுதான் எனது கடைசி அழைப்பு” என்று அவர் தனது தந்தையிடம் கூறியது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த அழைப்பைத் தொடர்ந்து, பதற்றமடைந்த அவரது தந்தை உடனடியாக ஜான்சிக்கு விரைந்துள்ளார். ஆனால், அவர் தங்குமிடத்திற்குச் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நீதிபதி அமன் குமார் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த சில நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பணியிடத்தில் நிலவிய சூழல் அல்லது தனிப்பட்ட காரணங்கள் அவரது இந்த முடிவுக்குக் காரணமா என்ற கோணத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மிக இளம் வயதிலேயே ஒரு நீதிபதி இத்தகைய முடிவை எடுத்தது சக நீதித்துறை அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து ஏதேனும் கடிதங்கள் கிடைக்கப்பெற்றதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
