ஒடிசா மாநிலத்தில் ஒரு நபர் கொடூரமாக தாக்கப்பட்டு, அவர் மீது புல்லட் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே ஒரு நபரைத் தரதரவென இழுத்துச் சென்று தாக்கியதோடு மட்டுமல்லாமல், வேண்டுமென்றே அவர் உடல் மீது வாகனத்தை ஏற்றிய அந்த காட்சிகள் பார்ப்போரை உறைய வைக்கின்றன.

இந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தை முன்வைத்து, மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு மீது காங்கிரஸ் கட்சி கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், குற்றவாளிகளுக்கு பயம் என்பது இல்லாமல் போய்விட்டதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“>

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய மாநில அரசு, உடனடியாக இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது ஒடிசா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.