உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ரத்தன்புரி பகுதியை சேர்ந்த ஷமா (வயது 28) என்ற இளம்பெண், கடந்த 2023ஆம் ஆண்டு அனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது ஷமாவின் பெற்றோர் ரூ.1 லட்சம் தொகையை வரதட்சணையாக வழங்கியிருந்தனர். ஆனால், அதில் திருப்தியில்லாத அனஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஷமாவை கூடுதல் வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர்.
சமீபத்தில், ரூ.5 லட்சம் வரதட்சணை வழங்குமாறு மீண்டும் அழுத்தம் கொடுத்த கணவர் அனஸ், அவரது தந்தை, தாய் மற்றும் உறவினர்கள், ஷமாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஷமா வீட்டிலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, ஷமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் அனஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பெண், வரதட்சணை கொடுக்கவில்லை என்பதற்காக இவ்வாறு உயிரிழக்க வேண்டிய நிலைமையைக் கொண்டு வந்தது சமூகத்தில் பெரும் சோகத்தையும் கோபத்தையும் எழுப்பியுள்ளது.
