மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ நரேந்திர சிங் குஷ்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா இடையே பரபரப்பான மோதல் ஏற்பட்டுள்ளது.

உரப் பற்றாக்குறையை வலியுறுத்தி, விவசாயிகளுடன் ஆட்சியரை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்ற எம்எல்ஏ, வெளியே வராத ஆட்சியரின் எதிர்பாராத நடத்தை காரணமாக, வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்தார். “பொதுமக்களையும் இன்று உங்கள் வீட்டுக்குள் அழைத்து வருவேன்” என எச்சரித்த குஷ்வா, கலெக்டரை “திருடன்” என திட்டியதோடு, அறைவது போல் கையை உயர்த்தியதும் காணொளிகளில் பதிவாகியுள்ளது.

“>

இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களுடன் கலெக்டர் இல்லத்துக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்திய குஷ்வா, கூடாரம், ஒலி அமைப்பு, ஏர் கூலர்கள் என எல்லாம் ஏற்பாடு செய்தனர். ‘பிந்த் கலெக்டர் திருடன்’ என கூச்சல் விட்டனர். அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றும் பயனளிக்காத நிலையில், போபாலிலிருந்து வந்த உயர் அதிகாரிகள் போன் அழைப்புக்குப் பிறகே தர்ணா முடிவுக்கு வந்தது.

பின்னர் கலெக்டரின் ஊழல், தவறான நிர்வாகம் குறித்து குஷ்வா ஊடகங்களுக்கு புகார் தெரிவித்தார். பிந்த் தொகுதியில் பல்வேறு கட்சிகளில் கடந்து வெற்றி பெற்றுள்ள குஷ்வா, தற்போது பாஜகவின் முக்கிய முகமாக செயலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.