இந்திய பெண் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பாலாஷ் முச்சால் ஆகியோரது திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர் வித்யான் மானே சுமத்தியுள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான வித்யான் மானே, பாலாஷ் முச்சால் மீது மகாராஷ்டிராவின் சாங்லி காவல் நிலையத்தில் நிதி மோசடி புகார் அளித்துள்ளார். திரைப்படத் திட்டம் தொடர்பாக பாலாஷ் முச்சால் தன்னிடம் ரூ. 40 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளதாக மானே குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அப்படத்தை வெளியிட கூடுதல் பணத்தை முதலீடு செய்யுமாறு பாலாஷ் குடும்பத்தினர் தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா – பாலாஷ் முச்சால் திருமணம் கடந்த நவம்பர் 23, 2025 அன்று நடைபெறவிருந்தது. ஆரம்பத்தில் குடும்பத்தினரின் உடல்நலக் குறைவு காரணமாகத் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வித்யான் மானே அளித்துள்ள பேட்டியில் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

“திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது (நவம்பர் 2025), பாலாஷ் முச்சால் வேறொரு பெண்ணுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்ததாகவும் அப்போது கையும் களவுமாகப் பிடிபட்டார். அந்தச் சமயத்தில் அவர் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே இருவருக்கும் இடையிலான உறவு முறிந்து, திருமணம் ரத்தானது,” என்று மானே குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை பாலாஷ் முச்சால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “வித்யான் மானே கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது. எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது தொடர்பாக எனது வழக்கறிஞர் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்,” என்று கூறியுள்ளார்.

திருமண ரத்து குறித்து ஸ்மிருதி மந்தனா விடுத்துள்ள செய்தியில், தங்களது தனிப்பட்ட விவகாரத்தில் தனியுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். பாலாஷ் முச்சால் தனது அறிக்கையில், “வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடிவெடுத்துள்ளேன். ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்,” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது விளையாட்டு மற்றும் திரையுலகினரிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.