தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்த கல்லூரி மாணவி ஒருவர் அளித்த பேட்டி தற்போது இணையதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அன்றைய தினம் அவருக்குத் தேர்வு இருந்தும், அதை எழுதச் செல்லாமல் மாநாட்டிற்கு வந்துள்ளார். “எனக்கு இன்னைக்கு எக்ஸாம் இருந்தது, ஆனா அதை எழுதப்போகல.

எனக்கு எக்ஸாமை விட, படிப்பை விட விஜய் தான் முக்கியம்னு வந்துட்டேன்” என்று அவர் மிகத் துணிச்சலாகக் கூறும் அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்தப் பெண்ணின் பேட்டி சமூக வலைதளங்களில் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்றுள்ளது. தவெக தொண்டர்கள் அவரது தீவிரப் பற்றைக் கொண்டாடினாலும், பெரும்பாலான நெட்டிசன்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“தலைவர் மீதான அன்பு இருக்கலாம், ஆனால் அதற்காகப் படிப்பையே வேண்டாம் என்று சொல்வது ஆபத்தானது” எனப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஒரு மாணவியே “படிப்பை விட விஜய் தான் முக்கியம்” என்று பேசியது, இன்றைய இளைஞர்களின் மனநிலை குறித்த விவாதத்தை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.