பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தௌசா (Taunsa) நகரில், ஒரே ஆண்டில் 331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி (HIV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு மருத்துவமனையின் மெத்தனப்போக்கும், சுகாதாரமற்ற நடைமுறைகளுமே இந்த விபரீதத்திற்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்துள்ளன. பிபிசி (BBC) நடத்திய ரகசிய ஆய்வில், அந்த மருத்துவமனையில் ஒரே சிரிஞ்சை (Syringe) பல குழந்தைகளுக்குத் திரும்பத் திரும்பப் பயன்படுத்திய அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
சுமார் 32 மணி நேர வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில், 10-க்கும் மேற்பட்ட முறை ஒரே ஊசியைப் பல குழந்தைகளுக்குப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், செவிலியர்கள் கையுறை அணியாமலும், கிருமி நீக்கம் செய்யப்படாத உபகரணங்களைக் கொண்டும் குழந்தைகளுக்கு ஊசி போட்டது கேமராவில் சிக்கியுள்ளது. “உடல்நிலை சரியில்லை என்றுதான் மருத்துவமனைக்குக் கூட்டி வந்தோம், ஆனால் அவர்கள் என் குழந்தையின் வாழ்வையே அழித்துவிட்டார்கள்” எனப் பெற்றோர்கள் கண்ணீர் மல்கக் கதறுகின்றனர். ஒரு தனியார் மருத்துவர் கொடுத்த தகவலின் பேரிலேயே இந்த மெகா மருத்துவக் கொள்ளை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
