இந்தியாவில் விலைவாசி உயர்வு குறித்து நாம் அவ்வப்போது வருத்தப்படுவதுண்டு. ஆனால், ஜப்பானின் டோக்கியோ நகரில் வசிக்கும் சுனாக்ஷி வர்மா என்ற இந்தியப் பெண் வெளியிட்டுள்ள வீடியோ, நம்மை மிரள வைத்துள்ளது. கணவர் மற்றும் ஒரு குழந்தையுடன் வசிக்கும் இவரது 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு, ஒரு மாதத்திற்கு மட்டும் சுமார் 2.9 லட்சம் ரூபாய் (5,00,000 யென்) செலவாகிறதாம்.

இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வீட்டு உபயோக மளிகைப் பொருட்களுக்கு மட்டுமே மாதம் 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய உணவுப் பொருட்கள் அங்கு மிக அதிக விலைக்கு விற்கப்படுவதே இதற்குக் காரணம் என அவர் விளக்கியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sunakshi Sharma (@desigirlinjapan)

தனது செலவுப் பட்டியலை விரிவாகப் பகிர்ந்துள்ள சுனாக்ஷி, வீட்டு வாடகைக்காக மட்டும் 1.16 லட்சம் ரூபாய் ஒதுக்குவதாகவும், குழந்தையின் கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு 58 ஆயிரம் ரூபாய் செலவாவதாகவும் தெரிவித்துள்ளார். இது தவிர, போக்குவரத்து, கார் சர்வீஸ் மற்றும் பெட்ரோல் போன்ற தேவைகளுக்கு மாதம் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை காலியாகிறது.

ஒட்டுமொத்தமாக மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய் செலவாகும் இந்தக் கணக்கைக் கேட்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ‘desigirlinjapan’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இதைப் பார்த்த பலரும், “உங்களுக்குச் சம்பளம் கோடிகளில் கிடைக்குமா?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ, “இவ்வளவு கஷ்டப்பட்டு அங்கிருப்பதற்குப் பதில், பேசாமல் இந்தியாவுக்கே வந்துவிடுங்கள்” என அவருக்கு அன்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் செட்டில் ஆக வேண்டும் எனத் துடிக்கும் இளைஞர்களுக்கு, அங்கிருக்கும் நிதர்சனமான விலைவாசி குறித்த ஒரு எச்சரிக்கையாகவே இந்த வீடியோ பார்க்கப்படுகிறது.