நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன், திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “புதியவர்கள் அரசியலுக்கு வரும்போது தடைகள் வருவது சகஜம்தான், அதை முறியடித்துத் தான் வர வேண்டும்” என்று கூறிய அவர், விஜய்யின் சினிமாப் படங்களை வைத்து அவரை யாரும் ‘பிளாக் மெயில்’ செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இப்போது விஜய் ஒரு முழுநேர அரசியல்வாதி என்பதால், தன் படங்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை என்றும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “காசு கொடுத்தால் வாங்கிக் கொள்வோம், ஆனால் ஓட்டு விஜய்க்குத்தான்” என்று மக்கள் தெளிவாக இருப்பதாகக் கூறிய எஸ்.ஏ.சி, காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கைகோர்த்தால் தனது பழைய வரலாற்றைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் ஒரு யோசனையை முன்வைத்தார். “யாருடனும் சேராமல் தனியாக நில், நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம்” என்று மக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய அவர், வரும் தேர்தலில் விஜய்யின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதாக நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
