நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இந்திரா நகரில் டாஸ்மார்க் ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரவி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இரவு நேரம் ரவியின் வீட்டிற்கு வந்த ஒரு பெண் அவரது மகளிடம் எனது மூத்த குழந்தை பந்தலூர் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து விட்டது. எனவே இந்த பச்சிளம் குழந்தையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கூறிவிட்டு ரவியின் மகளிடம் குழந்தையை கொடுத்து சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து தேவாலா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அது பிறந்து 7 நாட்களை ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. அந்த பெண் குழந்தையை விட்டு சென்றுள்ளார். அவர் யார் என்பது தெரியவில்லை. இதனால் 108 ஆம்புலன்சை வரவழைத்து ஊட்டி அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அந்த குழந்தை யாருடையது? அந்த பெண் குழந்தையை கடத்தி கொண்டு வந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.