நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் வேடர்காடு பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல் நிவாஸ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10-ஆம் தேதி பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு நின்று கொண்டு இருந்த கோகுல் நிவாஸ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த கோகுல் நிவாஸின் தந்தை வழி தாத்தா இளங்கோவன்(75) பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே கடந்த 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் பன்னீர்செல்வம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும். அடுத்தடுத்து தாத்தா, தந்தை, மகன் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.