மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

கடும் குளிரின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அவரது உடல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடத்தில் கேட்பாரற்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழியாகச் சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தவரின் உடலைத் தாண்டிச் சென்ற நிலையில், தெருநாய்கள் உடலைச் சிதைக்க முயன்றது பார்ப்போரை கண்கலங்கச் செய்தது.

இது குறித்து காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்தும், நீண்ட நேரமாக எவ்வித உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டு வேதனையடைந்த அப்பகுதி கடைக்காரர்கள், தாமாக முன்வந்து பணம் திரட்டி வெள்ளைத் துணி வாங்கி உடலைப் போர்த்தினர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த போதிலும், நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து சடலத்தை எடுத்துச் செல்ல வாகனம் வராததால் இழுபறி நீடித்தது.

இறுதியாக, அங்கு வந்த ஒரு டாக்ஸி ஓட்டுநர் தனது வாகனத்தில் எவ்விதக் கட்டணமும் இன்றி அந்த உடலை மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினரின் மெத்தனப் போக்கிற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.