ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கியில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், கஸ்டமர்களுடன் அமர்ந்து உணவருந்தும் போது கண்கலங்கி அழுத வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “லெட்ஸ் பார்ட்டி” (Let’s Party) என அலங்கரிக்கப்பட்ட ஒரு வீட்டில் உணவை டெலிவரி செய்யச் சென்ற அந்த ஊழியரை, அங்கிருந்தவர்கள் அன்புடன் அழைத்து உணவு பரிமாறியுள்ளனர். உணவைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட அந்த ஊழியர், “காலைல வெறும் டீ குடிச்சிட்டு வந்தேன், மதியம் கூட சாப்பிடல, அதுகூட இப்போ நீங்க சொன்ன அப்புறம் தான் எனக்குத் தோணுது” என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதது பார்ப்போரை உலுக்கியுள்ளது.
தனக்கு ஒரு மகன், ஒரு மகள் இருப்பதாகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவே பசி நோக்காமல் உழைப்பதாகவும் அவர் கூறியது ஒவ்வொரு தந்தையின் தியாகத்தையும் பறைசாற்றுவதாக அமைந்தது. கஸ்டமர்கள் அவருக்கு உணவளித்ததுடன், வீட்டிற்கு எடுத்துச் செல்ல உணவையும் பேக் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், அதே சமயம் அந்த ஊழியர் அழுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது சரியா? என நெட்டிசன்கள் மத்தியில் ஒரு பக்கம் விவாதம் எழுந்துள்ளது. “உதவி செய்வது விளம்பரத்திற்காக இருக்கக் கூடாது” என ஒரு தரப்பினரும், “இப்படிப்பட்ட வீடியோக்கள் தான் டெலிவரி ஊழியர்களின் கஷ்டங்களை உலகுக்குக் காட்டும்” என மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
