மும்பை போன்ற பெருநகரங்களில் வீடு கிடைப்பதே குதிரைக்கொம்பு, அதிலும் வாடகை விலையைக் கேட்டால் சாதாரண மனிதர்களுக்கு இதயம் நின்றுவிடும் போலிருக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று இதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மும்பையின் மிக விலையுயர்ந்த ‘பரேல்’ (Parel) பகுதியில் தங்கியிருக்கும் இரண்டு இளம் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தாங்கள் தங்கியிருக்கும் 700 சதுர அடி கொண்ட 2BHK பிளாட்டிற்கு மாதத்திற்கு ₹1 லட்சம் வாடகை கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலைக் கேட்டு நெட்டிசன்கள், “இந்த வயதில் நாங்கள் ஒரு சமோசா வாங்கக் கூட வீட்டின் கையைத் தான் எதிர்பார்க்கிறோம், ஆனால் இவர்கள் லட்சக்கணக்கில் வாடகை கொடுக்கிறார்களே!” எனத் திகைத்துப் போயுள்ளனர். அந்த வீடியோவில், தங்கள் வீட்டைச் சுற்றிக் காட்டிய அந்தப் பெண்கள், ஜன்னல் வழியாக விமானங்கள் பறப்பதையும் தரை இறங்குவதையும் பார்ப்பது தங்களுக்கு மிகுந்த மன அமைதியைத் தருவதாகக் கூறியுள்ளனர்.

மும்பையில் நல்ல வேலை வாய்ப்புகள் இருப்பதால் இங்கு தங்கியிருப்பதாகவும், ஆனால் மும்பையின் போக்குவரத்து நெரிசலால் ஒரு பகுதியில் இருப்பவர் மற்றொரு பகுதியில் இருக்கும் காதலரைச் சந்திப்பது கூட ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் கிண்டலாகத் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ள நிலையில், “வாடகையே ஒரு லட்சம் என்றால், இவர்களின் மாதச் சம்பளம் குறைந்தது 3 லட்சமாவது இருக்கும்” எனப் பலரும் கணக்குப் போட்டு வருகின்றனர்.