தில்லியில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவன், பழிவாங்கும் எண்ணத்தில், தனது பக்கத்து வீட்டு 4 வயது குழந்தையை கடத்தி, கொடூரமாக தாக்கியுள்ளான். கடுமையாக காயமடைந்த அந்த குழந்தை, தில்லியின் கலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில், 4 வயது குழந்தை ஹர்ஷ் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானதாக அவனது தாய் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தை ஒரு சிறுவனுடன் செல்வது தெரிந்தது.

அந்த சிறுவனை, குழந்தையின் தாய் 15 வயது பக்கத்து வீட்டு சிறுவனாக அடையாளம் காட்டினார். மேலும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்கனவே பகை இருந்தது. ஒரு நாள் முதலாளியின் மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்ததற்காக, 15 வயது சிறுவனின் தந்தை அவனை அடித்து திட்டியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், ஹர்ஷை கடத்தி, மலைப்பகுதியில் வைத்து பாறையால் தாக்கி காயப்படுத்தினான்.

காவல்துறை, சிறுவனின் வழிகாட்டுதலுடன் குழந்தையை காட்டுப்பகுதியில் மயக்க நிலையில் கண்டெடுத்து, மருத்துவமனையில் சேர்த்தது. ஆனால், கடுமையான காயங்கள் காரணமாக குழந்தை உயிரிழந்தது. முதலில் கடத்தல் மற்றும் கொலை முயற்சி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் மரணத்திற்கு பிறகு கொலைப் பிரிவும் சேர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய காவல்துறை, அவனது மனநிலை மற்றும் குடும்ப பின்னணி குறித்து மேலும் விசாரித்து வருகிறது.