உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில்கியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பப்னி கிராமத்தைச் சேர்ந்த ரவி யாதவ் என்ற மாணவர், புதன்கிழமை அன்று காயத்ரி பொதுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு இந்தித் தேர்வு எழுத வந்துள்ளார்.
மேலும் தேர்வு மையத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்தபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். மகனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனை செய்யாமலேயே உடலைப் பெற்றுச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
இந்த இச்சம்பவம் தேர்வு எழுத வந்த மற்ற மாணவர்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், மாவட்டம் முழுவதும் 119 மையங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்புடன் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் நாள் தேர்வில் சுமார் 3,690 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
