சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 35 மாணவர்கள் தங்களது கைகளை பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் அறுத்துக் கொண்டு தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்தரி மாவட்டம் தம்தகா நடுநிலைப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, மாணவர் ஒருவரின் கையில் வெட்டுக் காயங்கள் இருப்பதைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அந்த மாணவரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, பெற்றோர் அந்த மாணவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மற்ற மாணவர்களிடம் விசாரித்தபோது, பலருடைய கைகளிலும் இதே போன்ற காயங்கள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஒட்டுமொத்தமாக 35 மாணவர்கள் தங்கள் கைகளைத் தாங்களாகவே காயப்படுத்திக் கொண்டது கண்டறியப்பட்டது.
இந்தத் தகவல் பரவியதும் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிப்ரவரி 16 அன்று, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்குச் சிறப்பு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், மாணவர்கள் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார்கள்? அவர்களுக்குள் ஏதேனும் சவால் விடப்பட்டதா? அல்லது மன அழுத்தம் காரணமா? என்பது குறித்து அவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.
மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார் சாஹு இது குறித்து கூறுகையில், “மாணவர்களின் இத்தகைய செயல் கவலையளிக்கிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்றார்.
மேலும் ஒரே பள்ளியைச் சேர்ந்த இத்தனை மாணவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், சமூக ஆர்வலர்களிடையே கல்வி முறை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
