உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் தீபக் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், தன்னை பாபாவாகவும் சிவபெருமானின் தீவிர பக்தராகவும் காட்டிக் கொண்டு, அடிக்கடி சிவ வேடம் அணிந்து மக்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த வழியில், பெண்கள் மற்றும் சிறுமிகளின் நம்பிக்கையை பெற்று, அவர்களை தன்னிடம் ஈர்த்துவந்ததாக கூறப்படுகிறது.

இதில், ஒரு சிறுமியின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட ஹரித்வார் போலீசார் தீபக் சைனியை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது அவர் சிவபெருமான் வேடமணிந்திருந்தது போலீசாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தீபக் சைனி மீது சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் மீது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஹரித்வார் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.