தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவர், இந்த மின்வெட்டு விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
இதனால் “விஜய்யை கேள்வி கேட்டுவிட்டால் உடனே கரண்ட் வந்துவிடுமா? அவர் மைக் முன்னாடி வந்து ஏன் இப்படி நடந்தது என்று கேட்டால் உங்கள் வீட்டில் மின்சாரம் வந்துவிடுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள மகேந்திரன், பொதுமக்கள் சோலார் சிஸ்டம் போன்ற மாற்று வழிகளை முயற்சிக்கலாம் என்றும், மின்வெட்டு இருந்தாலும் ஒரு 6 மாத காலத்திற்கு அரசிடம் கேள்வி கேட்காமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகேந்திரனின் இந்த “பிராக்டிக்கல்” மற்றும் நகைச்சுவையான பேச்சு, நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “நாம்தான் இறங்கி கேள்வி கேட்க வேண்டும்” என்று தேர்தல் முடிவுகளுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவையும், தற்போதைய அவரது பேச்சையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு தரப்பினர் அவரது பேச்சை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைக்கு மக்களை கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறுவது முறையல்ல எனப் பெரும்பாலான இணையவாசிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருவதால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
