மத்திய கிழக்கில் நிலவி வரும் வளைகுடா போர்ச் சூழல் தற்போது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும், உலகம் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஈரான் மீதான இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய உகந்த நேரம் இதுவெனக் குறிப்பிட்டுள்ள அவர், போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலக நாடுகளின் எரிபொருள் மற்றும் உர விநியோகத்தைப் பாதித்து, உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில், அமைதியை நிலைநாட்டவும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுகளை எட்டவும் ஐக்கிய நாடுகள் சபை ஒரு தூதரை நியமித்துள்ளது.
இது போன்ற மோதல்களைத் தீவிரப்படுத்தும் முனைப்புகளில் ஈடுபடுவதற்கு இது நேரமல்ல என்றும், சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மதிப்பளித்து அனைத்து நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வளைகுடா பிராந்தியத்தில் அமைதியை மீட்கவும், அண்டை நாடுகளின் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும் ஐநா எடுத்து வரும் இந்த முயற்சி, ஒரு பேரழிவைத் தடுப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
