அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி மொகடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ட்ரம்பின் இந்தக் கூற்றை மறுத்துள்ள ஈரான் தூதர், ஊடகங்களில் வெளியாகும் இத்தகைய செய்திகளில் உண்மை இல்லை என்றும், இதுவரையில் எவ்வித அதிகாரப்பூர்வத் தொடர்புகளும் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படவில்லை என்றும் விளக்கியுள்ளார்.

தற்போது நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முன்வருவது இயல்பானது என்று குறிப்பிட்ட மொகடம், அத்தகைய முயற்சிகள் எதிர்காலத்தில் பலன் தரும் என நம்புவதாகவும் கூறினார்.

இருப்பினும், கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவின் போக்கே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க தரப்பிலிருந்து 15 அம்ச போர்நிறுத்தத் திட்டம் ஒன்று பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், ஈரானியத் தூதரின் இந்த மறுப்பு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது