தற்போதைய தொழில்நுட்ப உலகில் எப்போது வேலை பறிபோகும் என்ற அச்சம் ஐடி ஊழியர்களிடையே நிலவி வரும் சூழலில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது முன்யோசனையான சேமிப்பு மற்றும் தன்னம்பிக்கை மூலம் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஓராக்கிள் (Oracle) அண்மையில் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் அந்த இளைஞரும் தனது வேலையை இழந்தார். வழக்கமாக இதுபோன்ற சூழலில் ஊழியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். ஆனால், இந்த இளைஞர் பதற்றமடையாமல் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தார்.
வேலை இழந்தவுடன் பெருநகரங்களில் தங்கி அதிகச் செலவு செய்வதைத் தவிர்க்க முடிவு செய்த அவர், உடனடியாக புவனேஸ்வரில் உள்ள தனது சொந்த வீட்டிற்குத் திரும்பினார். இதன் மூலம் வாடகை மற்றும் உணவுச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டார். இந்த இளைஞரின் மிகப்பெரிய பலம் அவரது சேமிப்பு பழக்கம். அவர் ஐடி துறையில் பணியாற்றிய போது சேமித்த பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நிலையான வைப்புத் தொகையாக (Fixed Deposits) முதலீடு செய்திருந்தார். இதன் மூலம் அவருக்கு மாதந்தோறும் சுமார் ரூ. 40,000 வட்டி வருமானமாக மட்டுமே கிடைக்கிறது. வேலையில்லாத காலத்திலும் இந்த வருமானம் அவருக்குப் பெரிய நிதி பாதுகாப்பை வழங்கியுள்ளது.
One of my close friends was fired from Oracle Bangalore.
No panic, no stress, and no crying on social media.
He straight away came back to his hometown Bhubaneswar
He had postal fixed deposits in two joint accounts ₹15 lakh each. One with his parents, and the other in his…
— Nayak Satya (@NayakSatya_SG) April 5, 2026
வெறுமனே வீட்டில் உட்கார்ந்திருக்க விரும்பாத அவர், தனக்குத் தெரிந்த கார் ஓட்டும் திறமையை வைத்து ‘உபெர்’ (Uber) நிறுவனத்தில் ஓட்டுநராக இணைந்தார். இதன் மூலம் அன்றாடத் தேவைகளுக்கான வருமானத்தை ஈட்டுவதுடன், பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடுகிறார். தனது குடும்பத்தினரின் முழு ஆதரவுடன், விரைவில் ஒரு சிறு தொழில் தொடங்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார்.
இவரது நண்பர் சத்யா நாயக் என்பவர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த இந்தத் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. சேமிப்பு என்பது வெறும் பணம் மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தைரியம் என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். மாதம் ரூ. 40,000 வருமானம் இருந்தால் எவ்வித டென்ஷனும் இன்றி நிம்மதியாக வாழலாம் எனப் பலரும் இந்த இளைஞரின் நிதித் திட்டமிடலைப் பாராட்டி வருகின்றனர். மேலும் எந்த வேலையும் சிறியதல்ல என்பதையும், சிக்கனமான சேமிப்பு ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கும் என்பதையும் இந்த டெக்கியின் கதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
