அரசு மருத்துவமனையில் நோயாளிக்கான படுக்கையில் மதுபோதையில் உறங்கியதுடன், குப்பைத் தொட்டியில் சிறுநீர் கழித்து அநாகரிகமாக நடந்துகொண்ட 4 காவலர்களை மத்தியப் பிரதேச மாநில காவல் துறை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்ட அரசு மருத்துவமனையில், விசாரணைக் கைதி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக உதவி ஆய்வாளர் நர்மதா பிரசாத் பிரஜாபதி தலைமையில், காவலர்கள் உதயராஜ் சிங், ஜிதேந்திர சிங் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் கடந்த மார்ச் 28 முதல் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், பணியில் இருக்க வேண்டிய காவலர்கள் சீருடையைக் கழற்றி ஓரமாகத் தொங்கவிட்டுவிட்டு, நோயாளிக்கான படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

 

மேலும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும், அங்கிருந்த குப்பைத் தொட்டியிலேயே சிறுநீர் கழித்ததும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. சீருடைப் பணியில் இருந்து கொண்டு இத்தகைய அநாகரிகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டனர். முதற்கட்ட விசாரணையில், நான்கு காவலர்களும் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், உயர் அதிகாரி ஒருவரின் போதிய கண்காணிப்பு இல்லாததும் இத்தகைய ஒழுங்கீனத்திற்குக் காரணம் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது, பணியில் கவனக்குறைவாக இருந்தது மற்றும் கடும் ஒழுங்கீனம் ஆகிய காரணங்களுக்காக உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து சித்தி மாவட்ட காவல் துறை உத்தரவிட்டது. மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு பேரும் சித்தி மாவட்ட ஆயுதப்படை இருப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான கூடுதல் விசாரணை தொடர்கிறது.