மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் உள்ள விடுதி ஒன்றில், நாயை விரட்டுவதற்காக இரும்புத் கம்பியைப் பயன்படுத்திய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதாவது சத்தர்பூர் மாவட்டம்  ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு  விடுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த விடுதிக்குள் நாய் ஒன்று நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அதைக் கண்ட அங்கிருந்த வாலிபர், நாயை விரட்டுவதற்காக ஒரு நீண்ட இரும்புத் கம்பியை எடுத்துச் சென்றுள்ளார்.

விடுதியின் சுற்றுச்சுவர் அருகே சென்ற அந்த வாலிபர், கையில் இருந்த இரும்புத் கம்பியை மேலே தூக்கியபோது, எதிர்பாராதவிதமாக அங்கு மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் அந்தத் கம்பி உரசியது. கம்பி பட்ட அடுத்த விநாடியே பயங்கரமான தீப்பொறி கிளம்பி, அந்த வாலிபரை மின்சாரம் தாக்கியது. மின்சாரத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால், அந்த வாலிபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தார்.

 

மின்சாரம் தாக்கியபோது ஏற்பட்ட பயங்கர சத்தத்தைக் கேட்டு, விடுதியில் இருந்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்தனர். வாலிபர் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தின் முழுமையான காட்சிகள் தற்போது சிசிடிவியில் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விடுதிக்கு மிக அருகில் அல்லது மிகத் தாழ்வாக உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் சென்றதுதான் இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலு நாயை விரட்டச் சென்ற இடத்தில் கவனக்குறைவாக இரும்புத் கம்பியைத் தூக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.