கர்நாடக மாநிலம் பெலகாவியில், கள்ளக்காதலனுடன் ஓடிய தங்கையைச் சமாதானம் பேசி வீட்டிற்கு வரவழைத்து, வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிக் கொலை செய்த அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெலகாவி மாவட்டம் யமகனமரடி பகுதியைச் சேர்ந்தவர் சத்யவ்வா சந்தோஷ் ஹெலவி (24). இவருக்குத் திருமணமாகி கணவர் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, சத்யவ்வா சமீபத்தில் தனது கணவரைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

சத்யவ்வாவின் இந்தச் செயலால் அவரது குடும்பத்தினர் மிகுந்த அவமானமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த குடும்பத்தினர், சத்யவ்வா தங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தனர். அவரிடம் இனிமேல் எந்தப் பிரச்சினையும் செய்ய மாட்டோம் எனச் சமாதானம் பேசி, அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

சத்யவ்வா வீட்டிற்கு வந்தவுடன், அவரது அண்ணன் ஷானூர் சதாசிவா ஹெலவர் (35), உறவினர்களான பிரகாஷ் பீமப்பா (46) மற்றும் கல்லப்பா மாயப்பா (40) ஆகியோருடன் இணைந்து சத்யவ்வாவைக் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளனர். இதில் சத்யவ்வா துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்ததோடு நில்லாமல், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சத்யவ்வாவின் உடலை ரகசியமாக மயானத்திற்கு எடுத்துச் சென்று எரியூட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சத்யவ்வாவின் தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஷானூர் சதாசிவா உள்ளிட்ட மூவரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதலனுடன் ஓடியதால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவே தங்களைக் கொலை செய்து எரித்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, ஷானூர் சதாசிவா உட்பட 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கௌரவக் கொலை பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்பக் கௌரவத்திற்காகப் பெற்ற தங்கையையே விஷம் கொடுத்துக் கொன்று எரித்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.