மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் இல்லாமல் நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தான் நேர்மையாக நடந்து கொண்டதால் தான் தனக்கு இவ்வாறு நடந்தது எனவும் இதற்கு காரணம் மயிலாடுதுறை எஸ்பி தான் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதன் பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இவருக்கு ஆதரவாக கிண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரரான செல்வம் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அவர் பேசியதாவது, கடந்த 1997 ஆம் ஆண்டு நான் காவல்துறை பணியில் சேர்ந்தேன்.
கடந்த 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை டிஎஸ்பியாக இருந்த சுந்தரேசன் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்தார். நான் அவரிடம் ஓட்டுனராக பணிபுரிந்த நிலையில் அவரைப் போன்று ஒரு நேர்மையான மனிதரை பார்த்ததில்லை. நான் இதுவரை 12 இன்ஸ்பெக்டர்களுக்கு ஓட்டுநராக இருந்த நிலையில் அவரைப் போன்று ஒரு நேர்மையான மனிதரை பார்த்ததில்லை.
ஹோட்டலில் ஏதாவது வேண்டுமென்றால் கூட காசு கொடுத்து வாங்கி வருவதோடு எனக்கும் ஏதாவது வேண்டுமென்றால் வாங்கிக்க சொல்லுவார். அவர் நேர்மையாக இருப்பதால் கொஞ்சம் சீற்றமாக பேசுவார். சிங்கம் என்றைக்குமே சீற்றமாகத்தான் இருக்கும். அவர் நேர்மையாக இருப்பதால் பல்வேறு இடங்களுக்கு தூக்கி தூக்கி அடிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் யாரும் செய்யாத சாதனையை செய்தார்.
அவரை இந்த அரசு கவனிக்காவிடிலும் அவர் பக்கம் உண்மை இருப்பதால் கண்டிப்பாக அவர்தான் ஜெயிப்பார் என்றார். மேலும் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவரை ஆயுதப்படைக்கும் மாற்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
