ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த 29 வயதான லில்லித் லாட்ஜ், ஆன்லைனில் ‘வொர்ச்சுவல் கேர்ள் ஃப்ரெண்ட்’ (Virtual Girlfriend) ஆக இருந்து ஆண்டுக்குக் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதித்து வருகிறார். இவரது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்த மற்றும் மற்றவர்களிடம் பேசத் தயங்கும் ஆண்களாகவே இருக்கின்றனர். வினோதமான விஷயம் என்னவென்றால், இவர்கள் லில்லித்தை நேரில் சந்திக்க முன்பதிவு செய்துவிட்டு, கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்துவிடுவார்களாம். ஆனாலும், அதற்கான பணத்தை முழுமையாகச் செலுத்திவிடுகிறார்கள். நேரில் சந்திப்பதை விட ஆன்லைனில் பேசுவதையே அவர்கள் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் கருதுகிறார்கள்.
லில்லித் இதுகுறித்து கூறுகையில், “ஆண்கள் என்னுடன் ஆன்லைனில் பேசும்போது தங்களை ஒரு காதலனாகவே கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால், நேரில் சந்திக்கும்போது அந்தப் பொய்க்கனவு கலைந்துவிடும் என அவர்கள் பயப்படுகிறார்கள். மேலும், நேரில் சந்திக்கும்போது தாங்கள் எப்படித் தெரிவோம் என்ற கவலை அவர்களுக்கு இருக்கிறது. அதனால், வீட்டிலிருந்தே என்னுடன் பேசுவதை அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார். ஆன்லைன் டேட்டிங் உலகில் லில்லித் லாட்ஜின் இந்த வெற்றி மற்றும் அவர் சொல்லும் காரணங்கள் தற்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
