துபாயில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த திலக்குமார் – ஷாமினி தம்பதியினர், தனது தாயின் உயிரைக் காக்கப் போராடி வரும் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. திலக்குமாரைப் பார்ப்பதற்காக துபாய் சென்ற அவரது தாயார், எதிர்பாராத விதமாகத் தீவிர பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 40 நாட்களாக ஐசியு பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அங்கு ஒரு நாள் மருத்துவச் செலவு மட்டும் சுமார் 3 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், இதுவரை மொத்தக் கட்டணம் 1.25 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. தாயை வளர்த்தெடுத்த திலக்குமார், தற்போது அவர் கண் முன்னே சிகிச்சைக்குப் பணமின்றித் தவிக்கும் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைச் செலவைக் குறைக்கத் தாயாரை இந்தியாவிற்கு அழைத்து வரத் திட்டமிட்ட திலக்குமாருக்கு, போர்ச்சூழல் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
இதனால் மார்ச் 4-ம் தேதி 7 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவ விமானத்தில் செல்ல அனுமதி கிடைத்த நிலையில், போர் பதற்றம் காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தனியார் ஏர் ஆம்புலன்ஸ் மட்டுமே ஒரே வழி என்ற நிலையில், அதன் கட்டணம் 7 மடங்கு உயர்ந்து 50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாமல் தவிக்கும் திலக்குமார், “நேரம் கடந்து கொண்டே செல்கிறது, எனது தாயை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
