சீனாவின் ஒரு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு மிகப்பெரிய தடுப்பு ஏரி உடைந்ததால், நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தின் பேரழிவிலிருந்து நேபாளம் மீளப் போராடி வரும் நிலையில், சீனா விடுத்துள்ள இந்த எச்சரிக்கையால் நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், அங்குள்ள ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உருவான பெரிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் போதே கோஷி, திரிசூலி மற்றும் நாராயணி ஆகிய ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஏரியில் சுமார் 2 மில்லியன் கன மீட்டர் நீர் நிரம்பி வழியும் நிலையில், அடுத்த சில நாட்களில் மேலும் 3 மில்லியன் கன மீட்டர் நீர் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள சீன நீர்வள அமைச்சகம் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும், நேபாள நிர்வாகம் சீனாவுடன் தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது.
ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தில் நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில், திபெத் எல்லைப் பகுதியிலும் 260 வெளிநாட்டினர் உட்படச் சுமார் 600 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதைச் சீன அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
புதிய வெள்ள அபாயம் காரணமாக நேபாளத்தின் தாடிங், நுவாகோட் மற்றும் ரசுவா ஆகிய பகுதிகளில் மீட்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அனைத்துப் பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நேபாளப் பிரதமர் பாலாஜி ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
