நெல்லை மாவட்டத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதாகியுள்ள கவின் காதலித்த இளம் பெண்ணின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரான சரவணன், கொலை நடந்தபோது தான் ராஜபாளையத்தில் பணியில் இருந்ததாகவும், கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் கூறி ஜாமீன் கோரியிருந்தார். ஆனால், இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிசிஐடி தரப்பு, “மனுதாரர் சம்பவம் நடந்த நாளில் பணியில் இல்லை; விடுமுறையில்தான் இருந்திருக்கிறார். கொலை நடந்த இடத்தில் மனுதாரர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சரவணன் பணியில் இருந்ததால்தான் கொலை குறித்து அவருக்குத் தெரியாது என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். ஆனால், சிபிசிஐடி தரப்பின் வாதம் இதற்கு முற்றிலும் முரணாக இருந்தது.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட கவினின் தாயார் தரப்பு வழக்கறிஞர், சரவணனின் தலையீடு காரணமாகவே தனது புகார் தாமதமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்றும், வழக்கில் கூடுதல் வாதங்களை முன்வைக்க அவகாசம் தேவை என்றும் கோரினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.முரளி சங்கர், இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
