திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் சேவியரின் மனைவி ரோஸி (25), 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக எலி மருந்து விஷத்தைக் குடித்துள்ளார்.
இதனால் வீட்டில் மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டுச் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
தாயின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரது வயிற்றில் இருந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால், மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். இதில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று உயிருடன் பிறந்தது. எனினும், தாய் ரோஸி சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் தற்கொலை முயற்சி செய்த நிலையில், குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
