கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் சமீபத்தில் நிகழ்ந்த ஐடி ஊழியர் கவின் கொலை சம்பவம்,  தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்.

கடந்த வாரம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட உறவினரை அழைத்து, நெல்லையில் உள்ள தனியார் சித்த மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது, அங்கு பணியாற்றிய பள்ளித் தோழியான டாக்டர் சுபாஷினியுடன் உரையாடிக்கொண்டிருந்த நிலையில், சுபாஷினியின் தம்பியான சுர்ஜித், கவினை வெளியில் அழைத்துச் சென்று வாளால் சரமாரியாக தாக்கி கொலை செய்திருந்தார்.

“>

இந்த கொலை வழக்கில், சுர்ஜித் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய பெற்றோர் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது “கொலைக்கு தூண்டுதல்” என்ற குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், டிஐஜி உத்தரவின்பேரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சுர்ஜித்துக்கு எதிராக குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், சமூக வலைதளங்களில் சுபாஷினி குறித்து பரவும் தகவல்களுக்கு எதிராக, அவர் உணர்ச்சிபூர்வமாக விளக்கம் வழங்கியுள்ளார். அதில், “கவின் கொலைக்கும், எனது தாய் மற்றும் தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டுமே தெரியும். எனது உணர்வுகளை புரிந்து கொண்டு மதிப்பளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சுபாஷினியின் இந்த விளக்கம், சமூகத்தில் பரவும் வதந்திகளை தடுக்கவும், உண்மையை வெளிப்படுத்தவும் இடமளிக்கிறது. காவல்துறையினர், இந்த கொலை வழக்கை முழுமையாக விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.