திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் இத்திகுளத்தை சேர்ந்தவர் குசலவன்(55). இவர் அவரது வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் குசலவன் அவரது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குசலவன் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது கடையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
எனவே அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் குசலவனுக்கு ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கு வழங்கப்பட்ட உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் போன்றவற்றை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
மேலும் அந்தக் கடைக்கு 14 நாட்களுக்கு சீல் வைத்து அடைத்தனர். இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதற்காக குசலவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
