மும்பையின் முக்கிய பொதுப்போக்குவரத்து சேவையான மின்சார ரயிலில் ஓடும் ரயிலுக்குள் இரண்டு இளைஞர்கள் ‘சிலம்’ (Chillum) எனப்படும் களிமண் குழாய் மூலம் புகைபிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பயணிகளின் பாதுகாப்புக் குறித்தும், ரயில்வேத்துறையின் விதிமுறை அமலாக்கம் குறித்தும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், பயணித்துக் கொண்டிருக்கும் மின்சார ரயிலின் பொதுப் பெட்டியில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவர், ‘சிலம்’ குழாயைப் பற்றவைத்து புகைபிடிக்கிறார். பின்னர், அதைத் தன் அருகில் அமர்ந்திருக்கும் மற்றொரு இளைஞரிடம் கொடுக்கிறார். அவரும் மற்ற பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரயிலில் அமர்ந்துகொண்டே புகைபிடிக்கிறார்.

கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மும்பை மின்சார ரயிலில், சக பயணிகளுக்கு மத்தியில் இவ்வளவு பகிரங்கமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்டது இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் புகைத்தது புகையிலையா அல்லது கஞ்சா போன்ற போதைப்பொருளா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வீடியோ எப்போது, எந்த வழித்தடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல், வீடியோவில் உள்ள நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), அரசு ரயில்வே போலீஸ் (GRP) அல்லது மேற்கு ரயில்வே தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை

மேலும் இந்திய ரயில்வே சட்டங்களின்படி, ரயில் பெட்டிகளுக்குள்ளோ அல்லது ரயில்வே வளாகத்திலோ புகைபிடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்ட மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.