உத்தரப்பிரதேசத்தின் ராய்பரேலியில் காவலர் தேர்வு எழுதச் சென்ற இரண்டு மாணவிகளிடம் ஹசீப் என்ற ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்திற்குச் செல்வதற்காக அந்த மாணவிகள் காரில் ஏறியுள்ளனர்.

ஆனால், ஓட்டுநரான ஹசீப் அவர்களைத் தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், சமயோசிதமாகச் செயல்பட்டு காரில் இருந்து குதித்து தப்பித்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் மாணவிகளின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசாரைக் கண்டதும் ஹசீப் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காவல்துறையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளி ஹசீப்பின் காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவனை மீட்ட போலீசார் உடனடியாகக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.