திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே இயற்கை மரணம் அடைந்த ஒருவரின் ஈமச்சடங்கு நிதிக்காக ₹2,000 லஞ்சம் பெற்ற சமூக நல பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
நாட்றம்பள்ளியைச் சேர்ந்த மலர் என்பவரின் கணவர் பெருமாள் மகன் சேகர், தனது தாயாரின் ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள ₹25,000 நிதியைப் பெறுவதற்காகத் தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளிடம் மனு அளித்துள்ளார். அப்போது, அந்த நிதியை வழங்க வள்ளியம்மாள் ₹3,000 பேரம் பேசிய நிலையில், இறுதியில் ₹2,000 லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜு மற்றும் ஆய்வாளர் கௌரி தலைமையிலான குழுவினர், ரசாயனம் தடவிய பணத்தை சேகரிடம் கொடுத்து அனுப்பினர். தனி வட்டாட்சியர் வள்ளியம்மாள் அந்தப் பணத்தைப் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈமச்சடங்கு நிதியில் லஞ்சம் பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
