சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில், பொதுமக்கள் நிறைந்த பகுதியில் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தியால் ஓட ஓட வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்களத்தூர் சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு பீர்க்கங்கரணை மண்டல செயலாளராகச் செயல்பட்டு வந்தவருமான செந்தில், பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்து, செந்திலை திடீரென பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டத் தொடங்கியது. இதைப் பார்த்து உயிருக்குப் பயந்து செந்தில் ஓடிய நிலையில், அந்தக் கும்பல் விடாமல் துரத்திச் சென்று அவரை வெட்டியுள்ளது.
அப்போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த பீர்க்கங்கரணை போலீசார் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்தபோது, ரவுடிகள் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த செந்திலை மீட்ட போலீசார், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பீர்க்கங்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், மதுரவாயல் சர்வீஸ் சாலை அருகே பதுங்கி இருந்த சுதாகர், நரேஷ், விக்னேஷ், விஜய் ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழிலில் தனக்குத் தர வேண்டிய புரோக்கர் கமிஷனை செந்தில் தர மறுத்ததாகவும், பலமுறை கேட்டும் மிரட்டி வந்த ஆத்திரத்தில் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மக்கள் அதிக அளவில் கூடும் இடத்தில், அதிலும் போலீசார் கண்முன்னேயே இந்தக் கொலை முயற்சி நடந்திருப்பது, அப்பகுதியில் ஒரு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
