சிறுநீரகக் கல்லை அகற்றும் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் செய்த தவறால், வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சத்னாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தைக் கண்டித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதாவது பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி ரஜக் என்ற இளைஞருக்குச் சிறுநீரகத்தில் கல் பாதிப்பு இருந்தது. இதற்காக அவர் சத்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அவருக்கு சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சையின்போது, கல் இருந்த சிறுநீரகத்திற்குப் பதிலாக, ஆரோக்கியமாக இருந்த மற்றொரு சிறுநீரகத்தில் மருத்துவர்கள் தவறுதலாக ஆப்ரேஷன் செய்ததாக  கூறப்படுகிறது. இதனால் ரவியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் ரேவாவில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ரேவா மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ரவியின் ஆரோக்கியமான சிறுநீரகத்தில் ஆழமான வெட்டுக் காயம் இருப்பதும், அது அவசரமாகத் தையல் போடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ரத்தக் கசிவு மற்றும் தொற்று அதிகரித்ததால், வேறு வழியின்றி அந்தச் சிறுநீரகத்தையும் மருத்துவர்கள் அகற்ற வேண்டியதாயிற்று. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ரவியின் தந்தை கிரிதாரி லால் கூறுகையில், “சிறுநீரகக் கல்லுக்காக வந்த என் மகனை மருத்துவர்களின் அலட்சியம் கொன்றுவிட்டது” எனப் புகார் அளித்தார். இதற்கிடையே, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் புஷ்பேந்திர சிங், தனது தவறை ஒப்புக்கொண்டு சமாதானம் பேசும் வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞரின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ரூ.20 கோடி நஷ்டஈடு கேட்டு சடலத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தனியார் மருத்துவமனை முன்பும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் 3 காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தின்போது பெண்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சமார் 4 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காசோலை மற்றும் ரூ.50,000 ரொக்க உதவி வழங்க மருத்துவர்கள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் சுக்லா கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்படும். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.

மேலும் ஒரு சிறுநீரகக் கல்லை அகற்றச் சென்று, ஆரோக்கியமான சிறுநீரகத்தையும் இழந்து வாலிபர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.