சமூக ஊடகங்களில் மெட்ரோ மற்றும் ரயில்களில் நடக்கும் வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சில நேரங்களில் நடனமாடும் வீடியோக்களும், சில நேரங்களில் பயணிகளின் வேடிக்கையான செயல்களும் இணையத்தைக் கவர்ந்து வருகின்றன. ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் தனக்குத் தொல்லை கொடுத்த வாலிபருக்கு, இளம்பெண் ஒருவர் துணிச்சலுடன் பாடம் புகட்டியதே அந்த விவாதத்திற்குக் காரணம். வைரலாகி வரும் அந்த வீடியோவில், பயணிகள் கூட்டமாக இருக்கும் ஒரு ரயிலில், ஒரு வாலிபர் அங்கிருந்த இளம்பெண்ணை நோக்கித் தொடர்ந்து சைகை காட்டிக் கொண்டே இருக்கிறார். ஆரம்பத்தில் அந்தப் பெண் வாலிபரின் செயல்களைக் கண்டுகொள்ளாமல், அமைதியாகத் தவிர்த்து வருகிறார்.

இருப்பினும், அந்த வாலிபர் தனது எல்லையை மீறித் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்ததால், பொறுமையிழந்த அந்த இளம்பெண் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார்.

அந்த வாலிபரைத் தனக்கு அருகில் வருமாறு சைகை மூலம் அந்தப் பெண் அழைக்கிறார். அந்தப் பெண் ஏதோ சாதாரணமாகப் பேசப் போகிறார் என்று நினைத்து, அந்த வாலிபரும் அருகில் வருகிறார். ஆனால், அவர் அருகில் வந்த அடுத்த நொடி, அந்த இளம்பெண் கோபத்தின் உச்சத்துக்கே சென்று, ஒட்டுமொத்த பயணிகள் முன்னிலையிலும் அவரை வெளுத்து வாங்குகிறார்.

இளம்பெண்ணின் இந்தத் திடீர் கோபத்தையும், தைரியத்தையும் கண்ட அருகில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பொது இடத்தில் பெண்ணிடம் டோஸ் வாங்கியதால் அந்த வாலிபர் செய்வதறியாது திகைத்து நின்றார். இதற்கிடையில், ரயில் அடுத்த நிலையத்தை வந்தடைந்ததும், அந்த வாலிபர் அவசர அவசரமாக ரயிலை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.

இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் @Rishika_35 என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர்.

பயனர் ஒருவர் கூறுகையில், “இப்படிப்பட்ட நபர்களுக்கு இந்தத் பாணியில் தான் தகுந்த பதில்டி கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக இப்படித் துணிச்சலாகக் குரல் கொடுத்தால், பெண்களைத் தொல்லை செய்ய எவனுக்கும் தைரியம் வராது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் கிண்டலாக “இப்போதெல்லாம் ரயிலில் தினமும் ஒரு புதிய வைரல் கன்டென்ட் கிடைத்துவிடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

அதே வேளையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சில பயனர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இது சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) செய்து பிரபலமாவதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒரு நாடகமாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

“வீடியோவில் இருக்கும் இருவரும் முன்பே பழகிய நண்பர்கள் போலத் தெரிகிறது”, “இன்றைய காலத்தில் வைரலாவதற்கு மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்” என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இது உண்மையான சம்பவமா அல்லது லைக்குகளுக்காக எடுக்கப்பட்ட வீடியோவா என்பது ஒருபுறம் இருக்கட்டும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் தொல்லைகள் குறித்து இணையத்தில் இந்த வீடியோ ஒரு புதிய விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.